அரசியல் இடைத்தரகர்களின் அறமற்ற செயல்கள்…
அரசின் திட்டங்கள் என்பவை மக்களுக்கானவை, அதற்காக எந்த ஒரு பணமும், யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை என்பதே உண்மை. ஆனால், மாநில அரசின் திட்டமானாலும் சரி, மத்திய அரசின் திட்டமானாலும் சரி மக்களுக்கு உள்ள அறியாமையைப் பயன்படுத்தி உள்ளூர் அரசியல் தரகர்கள் இன்னும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதுதான் உண்மை. அவற்றிற்கு ஆதாரமாக திரு. சிவராமன் ஐய்யம்பெருமாள் அவர்களின் பதிவை முதலிலும், திரு.ஷாஜஹான் அவர்கள் பதிவை இரண்டாவதாகவும் பகிர்ந்துள்ளோம்.
மின் இணைப்பு வாங்கி தருவதாக 10 ஆண்டுகளாக ஏமாற்றிய நபர்
இரண்டு மாதங்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து பத்து பேர் எமது அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
“நாங்கள் வீடு கட்டி பத்தாண்டுகள் ஆகின்றன; இன்னும் வீடுகளுக்கு மின் இணைப்பு வாங்கவில்லை; விளக்கு வெளிச்சத்தில்தான் வாழ்கிறோம்; ஏதாவது உதவி செய்யுங்களேன்!” என்றனர்.
“இத்தனை ஆண்டுகளாக ஏன் மின்னிணைப்பு பெறவில்லை?” என்றேன்.
“அருகில் கம்பம் இல்லை; தெரு விளக்கு போடும்போது மின் இணைப்பு வாங்கித்தருகிறேன்” என்று ஊரில் உள்ள ஒரு பிரமுகர் கூறினாராம். அதனால், இவர்கள் மின்வாரியத்தை அணுகவில்லை. விண்ணப்பமும் அளிக்கவில்லை.
“தெருவிளக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை; வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டும் என்று விண்ணப்பம் செய்தால், அதற்கு எத்தனை கம்பம் போட்டாலும் மின்னிணைப்பு வழங்க வேண்டியது எங்கள் பொறுப்பு!” என்று கூறி விண்ணப்பம் அளிக்கக் கூறினேன்.
அதன்படி அவர்கள் விண்ணப்பங்கள் அளித்தனர். கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.விளக்கு வெளிச்சத்திலே இருந்த தாங்கள் மின்வெளிச்சம் கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினர். விளக்குகளை நெடுநாட்களாகப் பயன்படுத்தியதால், வீட்டு சுவர்கள் எல்லாம் புகை படிந்துள்ளது என்றும் கூறினர்.
இன்னும் ஒருவருக்கு மின்இணைப்பு வேண்டுமாம். அவரையும் விண்ணப்பம் அளிக்கக்கூறினேன். வீட்டு மின்னிணைப்புகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. ஒருமுணை மின் இணைப்பிற்கு ரூ 5196 /- மட்டுமே!
அவர்களில் இருவர் எமது அலுவலகத்திற்கு வந்து நன்றி தெரிவித்தனர். நாம் நமது கடமையைத்தின் செய்கிறோம். நுகர்வோர்களுக்கு அது பெரிய உதவிபோல் எண்ணி மகிழ்கின்றனர்.
கடமையை இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பின், பொதுமக்கள் நம்மை எளிதில் அனுகுவர்; அவர்களுக்கு அரசின் திட்டங்கள் விரைவாகச் சென்றடையும்! மக்கள் சேவையில்; நமது மின்வாரியம்!
முத்ரா கடன் திட்டத்துக்கு ரூ.10,000 லஞ்சம் பெற்ற நபர்
காலையில் வாக்கிங் முடித்து வருகையில் சிறிய மளிகைக்கடைக்காரப் பெண்மணி
சார்… முத்ரா லோன் பத்தி தெரியுமா?
(தெரியும் என்றாலும்,) அப்படியா… அதென்ன?
மோடி குடுக்குறாரு
மோடி அவரு அப்பாரு வீட்டுச் சொத்தெடுத்துக் குடுக்குறாரா?
அதில்ல சார். பேங்க் மூலமாக குடுக்குறாங்க.
சரி அதுக்கென்ன
பத்தாயிரம் ரூபா பணம் கட்டச் சொன்னாங்க. கட்டியிருக்கேன். இன்னிக்கி அகவுன்ட்ல பணம் வந்துடும்னாங்க.
எதுக்கு பத்தாயிரம் கட்டச் சொன்னாங்க? லஞ்சமா
இல்ல சார். ஏதோ டாகுமென்ட்லாம் ரெடி பண்றதுக்காம். அப்புறம் அந்தப் பத்தாயிரம் திரும்பி வந்துடுமாம்.
யாரு கட்டச் சொன்னா…? பிஜேபி காரனா?
ஆமா சார்
ஏம்மா… பேங்க்ல லோன் தர்றாங்கன்னா பேங்கலேயே டாகுமென்ட்லாம் இருக்கும். உங்க ஐடி ப்ரூப் மாதிரி டாகுமென்ட் எடுத்துட்டுப் போய் கையெழுத்துப் போட்டா முடிஞ்சுது. அதுக்கு பணம் எல்லாம் கேக்கமாட்டாங்களே…?
தெரியல சார். கேட்டாங்க குடுத்துட்டேன். வந்துரும்லே?
வந்துரும் என்று நம்பிக்கை தரவோ, வராது என்று நிராசை அடையச் செய்யவோ விருப்பமில்லாமல், அதே கடையில் பிஸ்கட் வாங்கி, காலைச் சுற்றி வாலாட்டிக் கொண்டிருந்த நாய்க்குப் போட்டுவிட்டு வந்து விட்டேன்.