வெடிப்புறப் பேசு

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..”

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..” -மணாவின் ‘ஊடகம் யாருக்கானது?’ நூல் விமர்சனம்

பத்திரிகையாளர் மணா தனது ஊடக வாழ்க்கை அனுபவங்கள் குறித்து  ‘ஊடகம் யாருக்கானது?’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல் குறித்து  ஆய்வாளர் பொ.நாகராஜன் திறனாய்வு செய்துள்ளார். அதனை இங்கே வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றோம். 

● ஊடகங்களில் பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும், இயக்குனராகவும் 42 ஆண்டுகள் பணியாற்றியவரும்; இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவரும்; பி. ராமமூர்த்தி நினைவு பரிசு மற்றும் வி. ஆர். கிருஷ்ணய்யர் பரிசு பெற்றவர் தோழர் மணா!

● இடதுசாரி சிந்தனையாளரும், கடவுள் மறுப்பாளரும்; சமரசமற்ற எழுத்தாளரும்; எல்லோரிடமும் இனிமையாக பழகுபவரும்; எனது அன்புத் தோழருமான மணா எழுதிய இந்த நூல் – ஊடகத்துறையை ஊடுருவி படம்பிடித்து உண்மையை தரும் படைப்பு! மணாவின் அனுபவ வெளிப்பாடு! அடுத்த தலைமுறைக்கான ஆவண நூல்!

● ஊடகம் யாருக்கானது? என்ற கேள்விக்கான தேடல் என்பதைவிட, ஊடகம் யாருடைய கையில் இருக்கிறது? என்பதற்கான விடையை தேடும் நூலாக இது அமைந்துள்ளது!

● ஊடகம் எப்போதுமே மக்களுக்கானது தான் ! ஆனால் அந்த ஊடகத்தை இன்று கார்ப்பரேட்டுகள் தங்கள் கைகளிலும், ஆட்சியாளர்கள் தங்கள் பைகளிலும் வைத்துள்ளார்கள்! வெகு ஜனங்களுக்கான தீனியையும் தீர்வையும் இவர்கள்தான் தீர்மானிக்கின்றார்கள்!

● இந்த சூழலில் இயங்கி வரும் ஊடகவியலாளர் தான் மணா! தன்னை ஒரு எளிய மக்களின் பிரதிநிதியாக எண்ணி, அவர்களின் வாழ்வியல், சூழல், அடிப்படை பிரச்சனைகளை நேரில் சென்று, கள ஆய்வு செய்து, பழகி, பேசி, பேட்டி எடுத்து, தான் பணியாற்றிய ஊடகங்களில் எழுதி சாதனை படைத்துள்ளார்!

● எத்தனையோ ஆளுமைகளை பேட்டியெடுத்து அவர்களைப் பற்றி அறிவதற்கு உதவியாக இருந்த மணாவையே ஒரு நீளமான பேட்டி ஏறத்தாழ 60 பக்கங்களை கொண்ட பேட்டி சிறப்பாக அமைந்துள்ளது! மணாவும் மனந்திறந்து பதில் தந்துள்ளார்!

● மணாவின் தொடக்க காலம், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், லா.ச.ரா.விடம் கொண்ட ஈர்ப்பு, மார்க்சியத்தை மனதுக்கு நெருக்கமாக கொண்டது, எழுதிய முதல் சிறுகதை, கவிதைத் தொகுப்பு, எழுத்தாளர் பிரமிளுடன் நட்பு, மாலன் நடத்திய பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக சேர்ந்தது இவ்வாறாக ஆரம்பிக்கிறது ஊடகப் பணியும் பயணமும்!

● புலனாய்வு செய்திகளை தேடி அலைந்த மணாவின் அனுபவங்கள் நம்மை அதிரச் செய்கிறது – வேடச்சந்தூர் அருகேயுள்ள கிராமம். தண்ணீருக்காக ஐந்து மைல் தொலைவுக்கு சென்று வரவேண்டியிருந்ததால், அவர்கள் தேர்தலை புறக்கணித்து, ‘ஓட்டுப் போட வேண்டாம்!’… என முடிவெடுத்திருந்தார்கள்.

● அவர்களை நேரில் சந்தித்து விவரங்களை அறிய சென்ற போது, அவர்கள் குடித்து வரும் கலங்கிய நீரைக் குடிக்க தன்னிடம் கொடுக்க, குமட்டலாக இருந்ததை சொல்கிறார் மணா!

தினம் தினம் அந்த தண்ணீரை குடிப்பவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும்? கள ஆய்வு செய்யாமல் இதை கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருப்பவர் எண்ண முடியுமா? எழுத முடியுமா?

● ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர் ஒன்றில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் சலூன் கடைக்குள் நுழைய முடியாதிருந்ததாம். அதை மீறி நுழைந்தவர்கள் கைகள் வெட்டப் பட்டனவாம். அந்தப் பிரிவினர் ‘வெளுத்து, இஸ்திரி போட்ட துணிகளை போடக் கூடாது’ என்ற கட்டுப்பாடும் இருந்ததாம்!

● அந்த ஊருக்குள் துணிவோடு உள்ளே சென்று, தகவல்களை சேகரித்து, திரும்பி வருவதற்குள் ஏராளமான கஷ்டங்களை சமாளித்து – அது பற்றிய கட்டுரையை எழுதி, ஜுனியர் விகடன் இதழில் வெளியிட்டதால் சில மாறுதல்கள் வந்ததாக மணா தனது பேட்டியில் கூறுகின்றார்!

● “எதிலும் தனக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதை மட்டுமே பார்த்தால், சமூகம் தொடர்பான எந்தப் பிரச்சனைகளையும் தொட முடியாது!…” என்று சொல்கிறார் மணா ! சமூக கடமைகளிலிருந்து விலகி நிற்கும் மக்களை நோக்கி, பெரியாரும் அம்பேத்கரும் இதைத்தானே வலியுறுத்தினார்கள்? சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடைய அதுதானே வழி ?

● துக்ளக் இதழில் சோவுடன் 14 ஆண்டுகள் மணா பணியாற்றிருக்கின்றார். இருவரும் இருதுருவங்கள். அங்கும் தனது தனித்துவத்தை தக்க வைத்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை துக்ளக்கில் சோ ஆதரித்து எழுதிய பின்பு, மணா அதை எதிர்த்து எழுதி வெளிக்கொணர செய்துள்ளார் ! அதற்காக சோவுக்கு நன்றியும் தெரிவிக்கிறார் !

● சோவால் இவர் அடி வாங்கிய கதையும் உண்டு ! துக்ளக்கில் சிறப்பு செய்தியாளராக இருந்த போது, திருச்சியில் இருந்த இலங்கை அகதிகள் முகாமுக்கு செய்திகள் சேகரிக்க மணா போயிருந்தார் ! துக்ளக் சோவோ இலங்கை பிரச்சனையில் ஏகோபித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டுக்கு கடுமையான எதிர் நிலைப்பாட்டை கொண்டிருந்தவர் !

● மணாவோ ஈழ ஆதரவு நிலைப்பாட்டாளராக இருப்பினும், ‘துக்ளக்’ என்ற பெயரை கேட்டவுடன் சரமாரியாக தாக்கப் பட்டாராம். பின்பு ஒரு தனியறையில் அடைக்கப் பட்டாராம். அதன்பின்னே சில அதிகாரிகளின் உதவியோடு காப்பாற்றப் பட்டார். இதுபற்றி புகார் தர மறுத்ததோடு சோவிடம் பேசும் போது, “உங்கள் மீது இருந்த ஆத்திரத்தை என்னிடம் காட்டியிருக்கின்றார்கள்!” என்று உண்மையைச் சொன்னாராம்!

● கடந்த நாற்பதாண்டு காலப் பத்திரிகையாளர் பணி உங்களுக்கு திருப்தி தருகின்றதா? என்ற கேள்விக்கு,

“சந்தைப்படுத்துவது – உலகமயமாக்கிப் பல சுதேசித் தொழில்களையும், சிறு தொழில்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றது ! வாழ்வில் நம்பிக்கை கொள்வதற்கான காரணங்களை விட, நம்பிக்கை இழப்பதற்கான காரணங்கள் கூடுதலாக உயிர்ப்புடன் நமக்கு முன்னால் இருக்கின்றன!”… என மணா தந்துள்ள பதில் ஊடகதுறைக்கு மட்டுமல்ல எல்லா துறைகளுக்கும் பொருந்துவதாக உள்ளது ! விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது!

● இது சம்பந்தமாக வேறு ஒரு தகவலையும் தருகிறார் மணா. இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்த, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி. பி. சாவந்த் சொன்னது – “இந்திய ஊடக சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் அல்ல! பத்திரிகை உரிமையாளர்களுக்கான சுதந்திரம்!” மக்களை கைப் பொம்மைகளாக வைத்திருப்பதற்கே இந்த சுதந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்பது விளங்குகிறது !

● அரசியல் தலைவர்களையும் பல ஆளுமைகளையும் கண்டு, பழகி, உரையாடி, பேட்டி எடுத்த சுவையான அனுபவங்களை  தருகிறார் மணா. கலைஞர் முதலைமைச்சராக இருந்த வேளை ஒருமுறை பேட்டி எடுத்து முடிந்த பின்பு, “எப்படியாவது என்னை மாட்ட வைக்கனும்னு நீங்க கேள்வியோடு வந்திருக்கீங்க…. எப்படியும் மாட்டக் கூடாதுன்னு நான் பதில் சொல்லி இருக்கேன்”… என தனக்கே உரித்தான சாதுர்யத்தோடு நிறைவு செய்தாராம், கலைஞர் !

● குமுதம் நிறுவனத்தை விட்டு வெளியேறி வேலையில்லாத போது, எழுத்தாளர் சின்னக்குத்தூசியை அவரது அறையில் மணா சந்தித்தார். “எதற்கும் தளர்ந்திடக் கூடாது… என்ன கண்ணா !” என ஒரு வாஞ்சையான தகப்பனைப் போல ஆறுதல் கூறி, சட்டைப் பையில் முப்பதாயிரம் ரூபாயை திணித்து, பணம் வந்த வேளை திருப்பி தந்தால் போதுமென்று கூறினாராம். அந்த நல்ல உள்ளத்தை மறவாமல் நினைவு கூறும் மாண்புதான் மணா !

● மணாவுக்கு தனது இளம்வயது நாயகன் ஜெயகாந்தனுடன் நல்ல நட்பிருந்திருக்கின்றது. இறுதியில் உடல்நலம் குன்றிய ஜெயகாந்தனை அவரது வீட்டில் சந்தித்த போது, “நான் இறந்தால் என்னைப்பற்றி ஒரு நூல் எழுதுவீயாய்யா?” …என்று சொன்ன கணம் நெகிழ வைத்ததையும் அவர் மறைந்து மூன்று வாரங்களுக்குள் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்ததையும் மணா நன்றியோடு நினைவு கூறுகின்றார் !

● அறிஞர் பெட்ரண்ட் ரசல் இவ்வாறு கூறினார் – “தான் பாதுகாப்பாக இருப்பதாக ஒரு அரசாங்கம் உணரும் போதுதான், கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பு இருக்கிறது!” ஊடகங்கள் தன்னை காப்பாற்றி கொள்ளவே கார்ப்பரேட்டுகளிடமும் கவர்ன்மெண்ட்களிடமும் கைகட்டி சேவகம் செய்கிறது ! அந்த காட்சிகளை நேரடியாக பார்த்து அனுபவித்த சாட்சியின் குரல் இந்த நூல் !

● பத்திரிகை உலகு மீது பத்திரிகையாளர் ஒருவரின் குற்றப் பத்திரிக்கை என்றும் கூறலாம்! தோழர் மணாவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

ஊடகம் யாருக்கானது?– எனது ஊடகப் பயணக் குறிப்புகள்

ஆசிரியர்: மணா

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்.

முதல் பதிப்பு – ஏப்ரல், 2022

பக்கங்கள் – 216

செல்பேசி:99404 46650

*சென்னை புத்தகக் காட்சி அரங்கு எண்கள்:F 30,583

விலை: ₹ 220/-

– பொ.நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன