வெடிப்புறப் பேசு

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்…

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்…

ஒரு தேசத்தின் தலைவன் குடிமக்களின் மீது நிறைந்த அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். இறுக்கமான உடல்மொழியும், பகட்டும் கொண்டவராக இருப்பவர்கள் தலைவர்களுக்குரிய தகுதியற்றவர்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் பகிர்ந்து‌ கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின்‌ முதல்வர்களோடு அமர்ந்து நேற்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின்‌ எளிமையையும், அவரது சக மனிதர்கள் மீதான நேசத்தையும் நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். அவரது ஹிந்தி மற்றும் ஆங்கில உரைகளை சில தமிழ் ஊடகங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

மொழி மாற்றம் செய்து எனது குரலிலேயே அவற்றை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். ஹிந்தியில் இருந்து மொழிமாற்றுவது கொஞ்சம் கடினமான‌ சவாலான பணிதான்.‌ 

ஆனால், அவருடைய இதயத் தூய்மை‌ கொண்ட சொற்கள் எனது பணியை ஈடுபாட்டோடு செய்ய வைக்கும் ஆற்றல் கொண்டது.

ஒருநாளும் எரிச்சலூட்டுகிற கேள்விகளுக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாக எதிர்வினையாற்ற‌ மாட்டார். ஊடகவியலாளர்களிடம் தனிப்பட்ட முறையில் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் குடும்பத்தினரை நலம் விசாரிப்பது வரை மிக ஆழமான மானுடப் பண்புகள் கொண்டவர் ராகுல் காந்தி.

இந்துத்துவ அரசியல்வாதிகளும், தேசத்தின் மூடர்களுமான சங்கிகள் அவரது அந்த எளிமையைத் தான் “பப்பு” என்று ஏளனம் செய்து எள்ளி நகையாடுவார்கள். ஆனால் அந்த பப்புத்தனம் தான் அவரது சிறப்பியல்பு.

அதற்காக அவர் ஒருபோதும் யாரையும் கடிந்து கொண்டதில்லை, இன்னும் சொல்லப்போனால் அது குறித்து அவர் பெரிதாக அலட்டிக் கொண்டதேயில்லை.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட அவருக்கு அருகில் அமர்ந்திருந்த கர்நாடக முதல்வர் பேசுவதற்காக தனக்கு எதிரில் வைத்திருந்த ஒலிப்பெருக்கிகளை நகர்த்தி சித்தராமையாவின் குரல் சரியாகக் கேட்பதற்கு ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல உதவிக் கொண்டிருந்தார்.

இந்துத்துவ ஃபாசிஸ்டுகள், மோடி உட்பட  இத்தகைய சக மனிதர்களுக்கு ஒருநாளும் ராகுலைப் போல உளத்தூய்மையோடு உதவுவதை நான் பார்த்ததில்லை. அதிகாரத் தோரணையும், செருக்கும் கொண்டவர்களாக அருவருக்கும் செயல்பாடுகள் கொண்டவர்கள் அவர்கள்.

தனது மேடையில் தடுமாறி விழுந்த ஒரு சக மனிதரை ஏதோ ஒரு அரிய விலங்கைப் போல பார்த்துக் கொண்டிருந்த அது குறித்த எந்த சலனமும் இல்லாமல் கேமராவுக்குப் போஸ் கொடுக்கிறவர் தான் நமக்கு வாய்த்த பிரதமர்.

நேற்றைய சந்திப்பில் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கூடிய இருந்தார்கள். ராகுல் பேசிக்கொண்டிருந்த போது ஒரு செய்தியாளர்

“சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் இந்தியாவைத் துண்டாட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்களே, இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்றொரு கேள்வியை எழுப்பினார்.

ராகுல் உடனடியாக யாரும் எதிர்பார்க்காத ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்களில் எத்தனை பேர் பழங்குடி வகுப்பினர்?, கைகளை உயர்த்துங்கள்”

எந்தக் கையும் உயரவில்லை. 

“உங்களில் எத்தனை பேர் தலித்துகள்?”

எந்தக் கையும் உயரவில்லை.

“உங்களில் எத்தனை பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்?”

ஒரு கை உயர்ந்தது, ராகுல் உடனடியாக “தம்பி நீங்கள் ஒரு கேமராமேன், செய்தியாளர் இல்லை” என்று புன்னகையோடு சொன்னார்.

பிறகு இரண்டொரு செய்தியாளர்களின் கைகள் உயர்ந்தன. 50க்கும் மேற்பட்ட தேசிய ஊடகங்களின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் இந்தக் கூட்டத்தில் கூட பிரதிநிதித்துவம் என்பது எப்படி இருக்கிறது பாருங்கள் என்று மறைமுகமாக அந்தக் கேள்விக்கு பதிலளித்து விட்டு 

“தேசத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று நாங்கள் கேட்பது இந்தப் பிரதிநிதித்துவத்தை Xray எடுப்பதற்காகத்தான்” என்று இயல்பாக பதில் சொல்லி விட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டார் ராகுல் காந்தி.

ஒருகணம் திகைத்துப் போனேன் நான், தேசத்தின் ஊடகங்களில் உயர் பொறுப்புகளில் இருந்து என்ன நடக்கிறது என்பதை உலகிற்கு சொல்ல இங்கிருக்கும் ஏறத்தாழ 90 விழுக்காடு மக்களின் பிரதிநிதிகள் யாருமில்லை.

ஊடகங்களின் உயர்‌ பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் உயர்சாதி என்றழைக்கப்படுபவர்கள். 

இவர்களால் எப்படி இந்த 90 விழுக்காடு மக்களின் குரலை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்‌ என்கிற கேள்வி மிக முக்கியமானது. அதிர்ச்சி அளிக்கக் கூடியது.

நம்பிக்கை தருகிற விஷயம் என்னவென்றால் தனது தேசத்தின் எளிய‌ குடிமக்களின் மீது அளப்பரிய நேசமும், தோழமையுடன் காட்டுகிற ராகுல் காந்தியைப் போன்ற இயல்பான தலைவர்கள் நம்மோடு வாழ்கிறார்கள். என்பதுதான். 

குறைகள் இருக்கலாம், நான் காங்கிரஸ் காரனல்ல, இன்னமும் காங்கிரஸ் கட்சி ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சிதான் என்று நம்புகிறவன் தான், அதற்கான கானணங்கள் இன்னுமிருக்கிறது.

ஆனாலும், ராகுல் காந்தியின் செயல்பாடுகள், அவரது எளிமை, உளத்தூய்மையோடு அவர் இந்த தேசத்தின் எளிய உழைக்கும் மக்களை அணைத்துக் கொள்கிற பண்பு, பெண்களையும், பெண் குழந்தைகளையும் அவர் நடத்துகிற மாண்பு‌ இவையெல்லாம் “பப்பு” என்று இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் அவருக்கு வைத்திருக்கும் பெயரின் மீது அளப்பரிய மதிப்பை உருவாக்குகிறது.

ராகுல் மதச்சார்பற்ற, மொழிசார்பற்ற இந்த மகத்தான தேசத்தின் தலைவரோ இல்லையோ, மகத்தான மானுடன்‌ என்பதில் மட்டும் எனக்கு ஒருபோதும் ஐயம் உண்டானதில்லை. மூத்த தலைவர்களை அவர் கையாளுகிற விதம், சாமானியர்களை அவர்‌ அணைத்துக் கொள்கிற பாங்கு என்று தொடர்ந்து இந்த தேசத்தின் பெருமைமிகு வரலாற்றில் மானுடத்தின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் நம்பிக்கை ஒளியேறிய கண்கள் ராகுலின் கண்கள்.

ஒருநாள் அதிகாரப்பூர்வமாக அவர் இந்த தேசத்தை வழிநடத்துகிற, இந்தியாவின் இறையான்மையை உலக மாந்தர்களிடம் கொண்டு சேர்க்கிற தலைவராக உருவெடுப்பார். அப்போதும் அவரை சங்கிகள் “பப்பு” என்றே அழைக்கட்டும்.

ஏனெனில் “பப்பு” என்பதன் உண்மையான பொருள் ஒரு குழந்தையைப் போல கள்ளங்கபடமின்றி வாழ்கிறவன் என்பது தான்.

-கை.அறிவழகன்

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன