வயதான அம்மா ஒருத்தரை அழைத்து வந்தார்கள். அவரைப் பார்க்கும் போது அத்தனை பரிதாபமாக இருந்தார். வெளியில் அவரைப் பற்றி கேட்டால் போதும், எல்லாரும் அவரை ரொம்ப நல்லவங்க, அமைதியானவங்க என்று தான் சொல்வார்கள்.
ஆனால் வீட்டில் யாருக்குமே அவரைப் பிடிக்கவில்லை. எல்லார்கிட்டயும் திட்டு வாங்குவார். திட்டு என்றால், 24 மணி நேரத்தில் குறைந்தது 10 மணி நேரம் ஆனாலும் திட்டு வாங்கி விடுவார்.இந்த அம்மாவின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே பொய் தான். சில நேரங்களில் மட்டுமே உண்மை இருக்கும். முதலில் தெரிஞ்சு செய்ய ஆரம்பித்தது, தற்போது அதுவே பழக்கமாக மாறி விட்டது.
புருசனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும் என்று யார் வீட்டிலாவது போய் வெறும் 100 ரூபாய், 50 ரூபாய் வாங்கிட்டு வந்து விடுவார். யார் காலிலும் விழுவதை பற்றி கூச்சமே பட மாட்டார். வீட்டினர் இதை எல்லாம் கேள்விப் படும் போது திட்ட ஆரம்பிப்பார்கள். திட்டுவதை பார்க்கும் போது, தெருவில் உள்ளவர்களுக்கு இந்த வயதான அம்மா மீது தான் பரிதாபம் வரும். அவரது உருவத் தோற்றம் அப்படி இருக்கும். இப்படி பாவமான சில உருவத் தோற்றங்கள் அவர்கள் செய்யும் வன்மத்தை சமூகத்துக்கு எடுத்துக் காட்டாது.
ஆனால் வீட்டினரோ எங்க குடும்ப மானத்தை அமைதியா இருந்து குழி தோண்டி புதைக்குறாங்க என்கிறார்கள்.
Dynamic psychology முக்கியமாக சொல்வது என்றால், அடி மனதில் தேங்கிக் கிடக்கும் எண்ணங்கள் எல்லாம், damming up (அணை) போல் தேங்கி, அவரது வாழ்வினை பாதிக்கிறது என்று நாங்க சொல்கிறோம்.
இந்த வயதான அம்மாவை, அவரது அம்மா ஒரே ஒரு பொண்ணு சொல்லி ரொம்ப செல்லமாக வளர்த்து இருக்கிறார்கள். 1960 களில் அப்பவே கேரளாவில் இருந்து சென்னையில் படிக்க வைத்து இருக்கிறார்கள். வசதி, செல்லம், முடிவு எடுகக்கும் உரிமை என்று எல்லாமே அவருக்கு இருந்து இருக்கிறது. ஆனால் திருமண வாழ்க்கையோ அவருக்கு பிடித்த மாதிரி இல்லை.
அதனால் யாரைப் பழி வாங்குவது என்று தெரியாமல், தன்னைத் தானே அசிங்கப் படுத்தி, குடும்பத்தின் முன் நின்று கொண்டே இருக்கிறார்.
பொதுவாக ரொம்ப நல்லவங்க என்று பெயர் எடுத்த எல்லாரும் வீட்டில் அவங்க பெற்றோரை, அவங்க கூடப் பிறந்த உறவுகளை, குடும்ப உறவினர்கள் கிட்ட மட்டுமே எங்கையோ ஒரு வன்மத்தை காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். அது சத்தம் போட்டு, கூச்சலிட்டு எல்லாம் இருக்காது.
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இருக்கும். அவர்களைப் பற்றி என்ன சொன்னாலும் அவர்கள் பாதிக்கப்பட்ட அதே வயதில் இருந்து மட்டுமே தன்னைப் பற்றி யோசிப்பார்கள்.
தன்னை சரியா கவனிக்கல, தனக்கு பிடித்த விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கல என்பதாக இருக்கும். இது ரெண்டும் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் அதன் அளவுகோல் கண்டிப்பாக மாறும். அந்த அளவுகோலில் உள்ள பாதிப்பு தான் யாரைப் பழி வாங்குவது என்று தெரியாமல், அவர்களை மொத்தமாக பழியாக கொடுத்து விடுவார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை ரொம்ப நல்லவங்க. ஏதோ வீட்டில் மட்டும் சின்னதா கோபப் படுறேன் என்பார்கள். ஆனால் மற்ற இடங்களில் காண்பிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அந்த அளவுக்கு முதலில் தைரியம் இருக்காது.
தற்கொலை பற்றி எல்லாம் யோசிக்க மாட்டார்கள். தினம் தினம் தான் அவமானப் படுவதும், மற்றவர்கள் முன்னிலையில் பரிதாபமாக நிற்பதும் இவை ரெண்டுமே அவரின் குடும்பத்துக்கு அவமானம். இதைத் தொடர்ந்து செய்வார்கள்.
எல்லாரும் Revenge எடுக்க மாட்டார்கள். சிலர் தனக்குத் தானே revenge வைக்கும் போது, அதைப் பார்க்கும் பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு இதுவே தண்டனை என்றே சொல்வார்கள்.இதுவே அவர்களின் மனதுக்கு principle of constancy என்றே வரையறை செய்கிறார்கள்.