வெடிப்புறப் பேசு

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?

தமிழ்நாட்டில் மணற்குவாரிகளில் அளவு கடந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்வள ஆதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மணற்குவாரிகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பல தலைவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 

மணற்குவாரிகளால் நீர்வள ஆதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மரணபள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சிக்கி அப்பாவி சிறுவர், சிறுமியர் தொடர்ந்து பலியாகி வருவதும் தொடர் கதையாகி இருக்கிறது. 

எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும் மணற்குவாரிகள் மூலம் பணம் கொட்டோ, கொட்டு என்று கொட்டிக்கொண்டிருக்கின்றது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். அதனால்தான் மணற்குவாரிகள் திறப்பதை, மணல் அள்ளுவதை எந்த அரசும் நிறுத்துவதில்லை. மணலுக்கு மாற்றாக மாற்று வழிகளையும் யாரும் யோசிப்பது இல்லை. 

அமலாக்கத்துறை ரெய்டு

இந்த சூழலில்தான் மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் மணல்குவாரிகளில் அதிரடி ரெய்டை நடத்தியது. தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் மணல் குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளுடன் தொடர்புடைய நபர்கள் உள்ளிட்ட 34 இடங்களில் அமலக்காத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய சோதனை கடந்த 14 ஆம் தேதி நிறைவு பெற்றது. 

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தில் உள்ள ராமச்சந்திரன் வீடு, புதுக்கோட்டையில் உள்ள அலுவலகம் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கடுமையான சோதனை நடைபெற்றது. 

இது தவிர  திண்டுக்கல் ரத்தினம்  உள்ளிட்டோரின்  இடங்கள் மற்றும் அவரது, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கரிகாலன், ஆடிட்டர் டி.சண்முகராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனைகளின் போது ரூ.12.82 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணக்கில் வராதபணம் ரூ.2.33 கோடி, ரூ.56.86 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

நீர்வளத்துறைக்கு கடிதம் 

அமலாக்கத்துறையின் சோதனையில் மணல்குவாரிகளில் நடைபெற்ற மணல் விற்பனை தொடர்பான பரிமாற்றங்களில் போலி ரசீதுகள் போடப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரசீதுகளின் உண்மை தன்மையை ஒப்பீடு செய்து பார்ப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களை தரும்படி தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியிருப்பதாக ஆங்கில இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆற்று மணல் விற்பனை மற்றும் மணல் சேமிப்பு ஒப்பந்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்களையும் அளிக்கும்படி நீர்வளத்துறைக்கு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் அதாவது 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரை மணல்குவாரி பரிவர்த்தனை விவரங்களை மட்டும் தரும்படி அமலாக்கத்துறை கேட்பது ஒரு தலைபட்சமானது என்று திமுக தரப்பில் சொல்கின்றனர். 

திமுகவுக்கு மட்டும் குறியா?

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைகள் ஒரு தலைபட்சமாக திமுகவையும், திமுக தலைவர்களின்  குடும்பத்தையும் குறிவைத்து மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்போது அமலாக்கத்துறையின் இந்த கடிதம் திமுகவில் புயலைக்கிளப்பி இருக்கிறது. 

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் மணல்குவாரிகளில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லையா என்றும் திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. 

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு 

தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்த சில நாட்களில் அதாவது கடந்த  2016ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரிச்சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை சொன்னது. 

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணல் குவாரி முறைகேடுகளில் தொடர்புடைய திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமசந்திரன் ஆகியரது வீடுகளில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. ஆனால், மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமசந்திரன் உள்ளிட்டோர் வருமானவரித்துறையில் மேல்முறையீட்டில் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது. 

ரெய்டு நாடகம் 

ஆனால், அவர்கள் இடத்தில் நடத்தப்பட்ட ரெய்டு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டது எல்லாமே அப்போதைய அரசியல் சூழலில் சில தமிழக தலைவர்களை வளைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் என்று சொல்கின்றனர். 

முதலில் வருமானவரித்துறை சோதனை நடைபெறும். வருமானவரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். 

இப்போது மணல்குவாரிகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் முந்தைய வருமானவரித்துறை சோதனையின் அடிப்படையில் ஆவணங்களை திரட்டி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுகவினர் கூறுகின்றனர்.  

2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடந்த மணற்குவாரிகளில் நடந்த முறைகேடுகள் வெளிவர வேண்டுமெனில் அப்போதைய ஆவணங்கள், பணப்பரிமாற்றங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது அமலாக்கத்துறையின் கடமையாகும். 

ஏனெனில் 2011-15 ஆகிய ஆண்டு காலகட்டத்தில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வழக்கை தோண்டியெடுத்து விசாரிக்கும் அமலாக்கத்துறையால் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மணல்குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க முடியாதா என்ன? 

-ரமணி 

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன