வெடிப்புறப் பேசு

துக்கத்தை அதிகமாக கொண்டாடுகிறோமா?

துக்கத்தை அதிகமாக கொண்டாடுகிறோமா?

உயிர்த்தோழியையோ கணவரையோ இழந்து பிரிவாற்றாமையால் தவிப்பவர்களின் பதிவுகளை முகநூலில் நிறையவே பார்க்க நேரிடுகிறது. நேரிலும் எனது மருத்துவமனையிலும் கூட நிறைய பேர் சொந்தங்களை இழந்து நடைபிணமாக வாழ்வதைப் பார்க்கிறேன்.

ஒரு வயதான தாய் அவரது 40 வயது மகனை 4 வருடங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றுக்கு பலி கொடுத்து விட்டு இன்னமும் நடை பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். துவண்டு போன கால்களுடனும் ஜீவனே இல்லாத கண்களுடனும் தளர்ந்த நடையில் அவ்வப்போது வந்து மருந்து வாங்கிக் கொண்டு செல்வார்.

துறுதுறுவென சுற்றிக் கொண்டு இருந்த 12 வயது பாலகனை மூன்று வருடங்களுக்கு முன்பு மூளைக்காய்ச்சலுக்கு பலி கொடுத்து விட்டு இன்னமும் வெறித்த விழிகளுடன் வலம் வரும் ஒரு தாய் அவ்வப்போது இங்கு வருவதுண்டு. இவர்களை எல்லாம் பார்க்கும் போது என் மனது வலிக்கும். இது போல் பலரும் வலியை எங்ஙனம் ஜீரணிப்பது என்றறியாமல் தன்னைத்தானே வதைத்துக் கொள்வது எனக்கு மிகுந்த வேதனையைத் தருவதுண்டு.

என் வாழ்விலும் இழப்புகள் நிறையவே உண்டு. உயிருடன் இருக்கும் போதே நான் துடிக்கத் துடிக்க என்னை விட்டுப் பிரிந்து போனவர்களும் உண்டு.‌ வலி இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் life has to go on இல்லையா…ஏதோ போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறையாக இருந்திருக்கும். அதனால் நம் வாழ்வில் குறிப்பிட்ட காலம் வரை மட்டும் இருந்துவிட்டு பிரிந்து விட்டார்கள் என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்.

உறவுகளை அகாலத்தில் இழந்தவர்கள் பலரும் கூறுவது ” இவனை மட்டும் கரையேத்திட்டேன்னா அல்லது பேத்தியை மட்டும் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன்னா நான் நிம்மதியா கண்ணை மூடீடுவேன்”. அவர்களுக்கு வாழ்வின் மீதான பற்று ஒரு இறப்புடன் முடிந்து போய் விடுகிறது. அதன் பின்னரும் வாழ்க்கையைத் தொடர்வதற்கு அவர்களுக்கு தேவை இது போன்ற ஏதோ ஒரு காரணம் மட்டுமே.

இங்கு வரும் பல நோயாளிகளுக்கும் அவர்களது நோய் ஆரம்பித்தது பெரும்பாலும் ஒரு இறப்பின் பின்னர் தான். கணவனை இழந்த பின்போ, பெற்ற மகனை இழந்த பின்போ, தன் தாயை இழந்த பின்போ என்று ஏதோ ஒரு இழப்பின் பின்னர் தான் அது தோன்றியிருக்கும். மனதை வருத்தும் வலி பெரும்பாலும் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் நிரந்தரமாகக் குடியேறி விடுகிறது.

துக்கத்தைக் கொண்டாடும் அளவிற்கு நாம் வேறு எந்த உணர்ச்சியும் கொண்டாடுவதில்லையோ என்று எனக்குத் தோன்றும். அதீத மகிழ்ச்சி வரும் போது நமக்குள் ஒரு பயம் வந்துவிடுகிறது.

இன்று கூட என்னிடம் மருந்து வாங்க வந்த ஒரு பெண்ணிடம் நான் கூறினேன் “நமக்கு ஒரு நல்லது நடக்கும் போது நம்பணும். அவநம்பிக்கையோடு இருக்கக் கூடாது.‌ We deserve to be happy too ன்னு நம்பி அந்த சந்தோஷத்தை நிம்மதியா அனுபவிக்கணும்”. ஆனால் அதை விட்டுட்டு ‘அய்யோ ரொம்ப சிரிச்சிட்டோமே, இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறோமே, என்ன நடக்குமோ’ ன்னு பயப்படத்தான் செய்கிறோம்.

ஆனா துக்கத்தை மட்டும் ஒரு கால அளவு இல்லாம பயங்கரமா அனுசரிக்கிறோம். உறவுகளை இழந்தவர்கள் அப்படித்தான் இருக்கணும்னு இந்த உலகமும் எதிர்பார்க்கிறது.

Our grief is more contagious just like our smile. Then why don’t we choose the later instead of the former. நம்மைக் கடந்து செல்பவர்களுக்கு நம்மால் வேறு ஒன்றும் கொடுக்க முடியாமல் போனாலும் ஒரு புன்சிரிப்பை இலவசமா உடனே கொடுக்க முடியும்.

So spread the smile and spread the love

ஜெயஸ்ரீ மீனாட்சி

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன