வெடிப்புறப் பேசு

அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் பாரத் இடம் பெற்றதன் பின்னணி…

அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் பாரத் இடம் பெற்றதன் பின்னணி…


ஆட்சியிலிருக்கும் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்திருக்கும் எதிர்க் கட்சிகள், தமது கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance என்று பெயர் வைத்துக் கொண்டன. அது சுருக்கமாக INDIA ஆனது. ஒன்பதாண்டு கால ஆட்சியில் ஏகத்துக்குப் பெயர் கெட்டுப்போய் அச்சத்தில் ஆடிப்போயிருக்கும் பாஜகவுக்கும் மோடி அரசுக்கும் இது பெரும் அதிர்ச்சியானது. எனவே., எதிர்பார்த்தது போலவே இந்தியாவுக்கு இந்தியா என்ற பெயர் இருப்பதை பாரத் என குறிப்பிட முனைகிறது.


அரசமைப்புச் சட்ட ரீதியாக இதை தவறு என்று சொல்ல முடியுமா?


சொல்ல முடியாது. ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியே “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” – India, that is Bharat, shall be a Union of States என்றுதான் துவங்குகிறது. சரி, அரசமைப்புச் சட்டத்தில் பாரத் என்று இருப்பதால் பாரத் என்று சொல்வதுதான் சரி என்று பாஜக ஆதரவாளர்கள் கூறுவதானால், ஒன்றியம் என்று சொல்வதும் சரிதானே? அப்புறம் ஏன் ஒன்றியம் என்று சொன்னதுமே வெறி பிடித்தவர்கள் போல பாய்ந்து பிடுங்குகிறார்கள்? ஏன் மத்திய என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்? ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை தர்க்க நியாயம் ஏதும் கிடையாது. முட்டாள்தனமாக தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். கேள்வி கேட்டால் ஆன்டி இன்டியன் என்பார்கள். இப்போது ஆன்டி இண்டியன் என்றும்கூட சொல்ல முடியாது பாவம்.

இன்னொரு விஷயம். அரசமைப்புச் சட்டம் முழுவதிலும் centre என்ற சொல்லே கிடையாது. (இதைப்பற்றி ஏற்கெனவே விரிவாக பதிவு எழுதியிருக்கிறேன்.) யூனியன் என்றுதான் அரசமைப்புச் சட்டம் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, அரசமைப்புச் சட்டம் முழுவதும் இந்தியா என்றுதான் இருக்குமே தவிர, முதல் வரியில் குறிப்பிட்ட ஓர் இடம் தவிர, எங்குமே “பாரத்” என்ற சொல்லைப் பார்க்க முடியாது.


சரி, இந்த பாரத் எப்படி நுழைந்தது என்று பார்ப்போமா?


1948 நவம்பர் 4ஆம் தேதி அரசமைப்புச் சட்டத்தின் வரைவை அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையின் முன் வைக்கிறார். அதாவது, 1948 பிப்ரவரியில் தயாரித்து, உறுப்பினர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்ட பிறகு, அவையில் விவாதத்துக்கு முன்வைக்கிறார். அந்த வரைவில் பாரத் என்ற சொல் இருக்கவில்லை. India shall be Union of States என்றுதான் அதில் உள்ளது. பின் எப்படி இந்தத் திருத்தம் செய்ய நேர்ந்தது?


அந்த வரைவு குறித்த விவாதம் 1948 நவம்பர் 17-18 தேதிகளில் வந்தது. அப்போதே பாரத் என்ற பெயர் சேர்க்க வேண்டும் என சிலர் வாதிட்டனர். கோவிந்த் வல்லப பந்த், இந்த விஷயத்தை ஒத்தி வைத்துவிட்டு அடுத்த விஷயத்துக்குப் போகலாம். இதை பிற்பாடு பார்க்கலாம். அதற்குள் நல்லதொரு யோசனை கிடைக்கலாம் என்றார். அதற்கு சுமார் ஓராண்டுக்குப் பிறகு, 1949 செப்டம்பர் 17ஆம் தேதி அதே அம்பேத்கர் ஒரு திருத்தத்தை முன் வைக்கிறார். அதில்தான் இந்தியா, அதாவது, பாரதம், மாநநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் – India, that is, Bharat shall be a Union of States என்கிறார்.


இந்தத் திருத்தம் முன்வைத்த பிறகும்கூட பெயர் குறித்து பெரிய அளவுக்கு விவாதம் நடந்தது. பாரத், ஹிந்துஸ்தான், ஹிந்த், பாரதபூமி, பாரதவர்ஷா என பல்வேறு பெயர்களை பல்வேறு நபர்கள் முன்வைத்தார்கள். ‘Union of Republics of India or Union of Socialist Republic of India’ என்று பெயரிட வேண்டும் என்றார் ஹஸரத் மொஹானி. ஹெச்.வி. காமத் என்பவர்தான் பாரத் என்பதே பெயராக இருக்க வேண்டும் என்றார் – Bharat, or, in the English language, India, shall be a Union of States என்றார். பெரும்பான்மையினர் இந்தியா என்பதே போதும் என்றனர். விஷ்ணுபுராணத்தில் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் ஒருவர். பாரத் மாதா கீ ஜே என்ற கோஷம் இருக்கிறது என்றார் இன்னொருவர். (இந்தியை பாரதி என்று சொல்ல வேண்டும் என்றார் கல்லூர் சுப்பா ராவ் )

துஷ்யந்தனுக்கும் சாகுந்தலைக்கும் பிறந்த மகனுக்கு பாரத் என்று பெயர் வைத்தார் காளிதாசர் என்றார் ஒருவர். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்றும்கூட பெயர்கள் முன்வந்தன. இப்படியே விவாதம் நீண்டது. அம்பேத்கர் வெறுத்துப்போய், “நமக்கு எவ்வளவோ முக்கியமான வேலை கிடக்கிறது. இதைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே விவாதித்து விட்டோம்” என்றார். கோபாவேசமான உரையாடல்கள் நடந்துள்ளன. இதையெல்லாம் அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் வாசிக்கலாம்.

இறுதியில் எம்.வி. காமத் முன்வைத்த Bharat, or, in the English language, India, shall be a Union of States என்ற திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திருத்தம் 51க்கு 38 என்ற கணக்கில் தோல்வி கண்டது. அம்பேத்கர் முன்வைத்த திருத்தம் ஏற்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பெரும் நெருக்கடி இருந்தது. காங்கிரஸ்காரர்கள் மட்டுமே இல்லாமல், பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்களும் அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்க வேண்டும் என்று நேரு நேர்மையாக நினைத்தார். இந்துத்துவர்கள், தனியார்மய ஆதரவாளர்கள், சோஷலிஸ்ட்கள் எனப் பல பிரிவினரையும் சேர்த்தார். காங்கிரசுக்குள் இருந்தவர்களிலும் பலர் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். நேரு அம்பேத்கருக்குத் துணையாக இருந்தார் என்றாலும், பல விஷயங்களில் சமரசங்களை செய்ய வேண்டியிருந்தது.

அப்படியொரு சமரசம்தான் பாரத் என்ற பெயரை இதில் சேர்த்ததும். அதனால்தான் அரசமைப்புச் சட்டத்திலும் முதல் வரியைத் தவிர வேறெங்கும் பாரத் என்ற பெயரைக் காண முடியாது. இதுபோன்ற சின்னச் சின்ன சமரசங்கள்தான் இன்று பிரச்சினையாக மாறி நிற்கின்றன. வந்தே மாதரம்தான் தேசிய கீதம் என்பதும் அதுபோன்றதே. இதுபோன்ற விவாதங்கள் வரும்போதெல்லாம் ஏற்கெனவே எழுதிய விஷயம்தான் நினைவுக்கு வருகிறது.

“நான் உருவாக்கிய சட்டத்தின் பெருமைகளைப்பற்றி இங்கு பேசப்போவதில்லை. ஏனென்றால், எவ்வளவு சிறந்த சட்டமாக இருந்தாலும், அதனை ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் ஒருவேளை மோசமானவர்களாக அமைந்து விட்டால் அந்த சட்டம் நன்மை பயக்காது. ஆனால் சட்டம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் ஆட்சி செய்பவர்கள் நல்லவர்களாக இருந்து விட்டால் மோசமான சட்டம்கூட நன்மையே பயக்கும்.” அரசமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும்போது அம்பேத்கர் சொன்னது.

கட்டுரை நன்றி; திரு.புதியவன்

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன