வெடிப்புறப் பேசு

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை 

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை 

தேர்தல் பத்திரங்கள் மூலம், யார் என தெரியாத நபர்கள், யார் என தெரியாத நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக பெறப்படுகிறது. இதில் வெளிப்படை தன்மை தேவை என்று கூறி ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் எனும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்த விஷயத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண்நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் முன்பு கோரிக்கை விடுத்தார். 

பிரசாந்த் பூஷண் கருத்தையே இதர மனுதார ர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து உச்ச நீதிமன்றம் லேசாக அசைந்து கொடுத்திருக்கிறது. வரும் 31ஆம் தேதி விசாரணை செய்வதாக உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

  1. இன்னாரென்று தெரியாத அனாமத்தான நன்கொடைகள் பெறப்படுகிறது 
  2. இதன் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நிதியை தெரிந்து கொள்ள உதவும் மக்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்ததின் விதிமீறல் ஆகிய அம்சங்கள் அடிப்படையில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

இந்த இரண்டு அம்சங்களும் அரசியல் சட்டப்பிரிவு 19,14, 21 ஆகியவற்றின் மீறல்கள் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். 

பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற வழிவகுக்கும் முறையை பண மசோதா திருத்தம் கொண்டு வந்தது சரியா என்பது குறித்து ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் இப்போது மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்த இரண்டு அம்சங்களின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் வேறு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்பதே பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோரின் கோரிக்கையாகும். 

பத்திரங்களை வாங்குவோர் தான் வாங்கிய பத்திரத்தை அரசியல் கட்சிகளுக்கு மாற்றலாம். அப்படி மாற்றியவர் யார் என்றும் சொல்ல வேண்டிய அவசியல் இல்லை என்பதுதான் பணமசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள். 

இந்த திருத்தங்கள் மூலம் ஒரு நிறுவனம், அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு பத்திரங்கள் வாயிலாக எவ்வளவு தொகை வேண்டுமானலும் நன்கொடை அளிக்க முடியும். இப்படி நன்கொடை கொடுக்கும் நிறுவனம் யாரென்று வெளியில் சொல்ல வேண்டியதில்லை. இப்படி அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதற்கே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதார விவகாரங்களுக்கான துறை அளித்த பதில் மூலம் கிடைத்த தகவல்கள்.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 24 கட்டங்களாக பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில் ரூ.11,699.84 கோடி பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. 

எந்த கட்சிக்கு எவ்வளவு கிடைத்தது?

அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த தகவல்களின்படி 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9,208 கோடி தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக தரப்பட்டன. இதில் 57 சதவிகித தொகையை அதாவது ரூ.. 5,270 கோடி தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்றுள்ளது 

எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கு ரூ.964 கோடி அதாவது மொத்த பத்திர நன்கொடையில் 10 சதவீதம் கிடைத்தது. மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு ரூ.767 கோடி கிடைத்தது.

தேர்தல் பத்திர விற்பனையை தொடங்கிய எஸ்பிஐ

இந்த நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக எஸ்பிஐ வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி 1,000ரூ, 10,000ரூ, 1,00,000ரூ, 10,00,000ரூ, 1,00,00,000ரூ போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்களானது அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ(SBI) வங்கி கிளைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-ரமணி 

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன