வெடிப்புறப் பேசு

சபரிமலை பிரசாதம் தயாரிக்க ஏலம் எடுத்தவர் மீது சாதிய தாக்குதல்…

சபரிமலை பிரசாதம் தயாரிக்க ஏலம் எடுத்தவர் மீது சாதிய தாக்குதல்…

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வரவிருக்கும் விழாக் காலத்திற்காக கோயில் பிரசாதம் தயாரிப்பு ஏலமுறையில் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த முறையும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான  ஏலம் கடந்த 2ஆம் தேதி திருவனந்தபுரம் நந்தன்கோட் பகுதியில் உள்ள தேவசம் போர்டு அலுவலகத்தில் நடைபெற்றது. 

உண்ணியப்பம்  பிரசாதம் தயாரிக்கும் ஏலத்தில்(Tender),திருவனந்தபுரம், பள்ளிச்சல், தேரிக்க விளையைச் சேர்ந்த, சுபி என்பவர், வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், சபரிமலைக்கு வரும் திருவிழா காலத்தில் உண்ணியப்பம் தயா‌ரித்து வழங்குவார். 

பிரசாதம் குறித்த ஒப்பந்த ஏலம் முடிந்த பிறகு, ஏலம் நடைபெற்ற திருவனந்தபுரம் தேவசம் போர்டு அலுவலகம் முன்பு சுபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் சுபியின் முகத்தில் காறி உமிழ்ந்து, அவரது கன்னத்தில் அறைந்து கொண்டே,சுபியின், சாதிப் பெயரையும் கூறி இழிவுபடுத்தி உள்ளனர். 

பட்டியலினத்தவரான சுபியின் மீது நடைபெற்ற தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கன்னத்தில் அறைவாங்கிய சுபி செய்வதறியாமல் திகைத்தார். இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றதில்லை என்று கேரளவாசிகள் சொல்கிறார்கள். 

இந்த நிலையில் தேவசம் போர்டு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுபி மீது காறி உமிழ்ந்து அவரை கன்னத்தில் அறைந்தது ஜெகதீஷ், ரமேஷ் ஆகிய இருவர் என்பதை கண்டறிந்திருக்கின்றனர். அவர்களும் ஏலத்தில் பங்கேற்று இருந்தது தெரியவந்தது.  அவர்கள்  அப்போதே தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. 

எங்களைப் போன்ற, மேல் சாதியைச் சேர்ந்தவர்கள், இந்த பூமியில் இல்லாமல் போன பிறகு தான், உன்னைப்போன்ற, பட்டியலினத்தவர்  

(சுபியின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு) சபரிமலை உண்ணியப்பம் தயாரிக்கும் ஏலத்தில் பங்கேற்க முடியும் என்று கூறிக் கொண்டே ஜெகதீஷ், 

ரமேஷ் இருவரு‌ம் சுபியை தாக்கியதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் இருவர் மீதும்  வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பின்னணி தகவல் 

2021ஆம் ஆண்டு கேரள தேவசம் போர்டு வெளியிட்ட டெண்டரில் ஐய்யப்பன் கோவில் பிரசாதம் தயாரிக்க மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. சபரிமலையில் உண்ணியப்பம், வெல்ல நைவேத்யம், சக்கர பிரசாதம், அவல் பிரசாதம் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பாக அம்பேத்கர் கலாசார அமைப்பின் தலைவர் சிவன் குடாலி என்பவர், அரசின் நிறுவனமான தேவசம் போர்டு நிறுவனத்தில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டது சம உரிமைக்கு எதிரானது என்று கூறினார். 

இந்த விளம்பரத்துக்கு எதிராக கேரள அரசு மற்றும் கேரள மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து இந்த விளம்பரம் மத ரீதியாக பாகுபாடு பார்ப்பதாக மனித உரிமை ஆணையம் கூறியது. இதனை பின்பற்றக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இதையடுத்தே பிரசாதம் தயாரிக்கும் டெண்டரில் அனைத்து பிரிவினரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 

இனி என்ன ஆகும்?

கேரளாவில் சாதி ரீதியான பாகுபாடுகள் அதிகம் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். ஆதிக்க சாதியினர் வலுவான கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து இருக்கின்றனர். அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தோர் தங்களுக்கான உரிமைகளை பெறுவதில் வலுவான குரலை எழுப்பி வருகின்றனர். சபரிமலை பிரசாதம் தயாரிக்கும் விவகாரத்திலும் பட்டியலினத்தவர்கள் ஏலம் எடுத்ததும் அப்படி ஒரு நடவடிக்கைதான் என்று கூறப்படுகிறது.

சபரிமலை பிரசாதம் தயாரிப்பு பட்டியலினத்தவர்களுக்கு ஏலம் போன பிரச்னையை வலதுசாரி அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கின்றன.குறிப்பாக சனாதனம் பற்றிய விவாதங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த விஷயத்தை இந்து அமைப்புகள் அவ்வளவு எளிதாக விட்டு விடாது என்றே தெரிகிறது. 

கேரள இடது சாரி அரசை பொறுத்தவரை மதசார்ப்பற்ற அரசாக செயல்பட்டு வரும் நிலையில் பலமுற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐய்யப்பன் கோயிலில் பெண்கள் நுழைவு போராட்டங்களை சமாளித்த இடது சாரி அரசு இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்படும் என்று தெரிகிறது. 

-ரமணி

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன