வெடிப்புறப் பேசு

மனிதர்களால் புலன்களை மீறி உணர முடியுமா?

மனிதர்களால் புலன்களை மீறி உணர முடியுமா?

கடவுள், பேய், ஜாதகம், ஜோதிடம், ஏவல் , சாமியாடுதல் வரிசையில் பூர்வ ஜன்ம நினைவுகள், ஈ எஸ் பி (Extra Sensory Perception) எனப்படும் வருமுன் அறிதல் போன்றவை மீதும் உள்ள நம்பிக்கை போய்விடும்.

பல பேர் என்னிடம் சொல்லி இருக்கின்றார்கள் ‘ டாக்டர்! நான் யாருக்காவது எதாவது நடந்துவிடும் என நினைப்பேன். அது கரக்டா நடக்கும்’ என.

நிஜமாகவே மனிதர்களுக்கு இப்படிப் புலன்களை மீறி உணர முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் அந்த மக்கள் பொய் சொல்லவில்லை. பின் எதனால் அப்படி நடக்கிறது?

இவர்கள் சொல்லும் பெரும்பாலானவை நடக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் சம்பவங்கள். ( High probability events). 96 வயது நபர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்றால் அவர் இறந்து விடுவாரோ என பயந்தால் அவர் இறக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அவரது 90 வயது மனைவி சொல்வார் ” அவருக்கு எதோ ஆகப் போகுது என இன்னிக்கு காலைலே தோணிச்சு” என.

அது போன்றே ஆறு மாதமாக வண்டிக்குக் கடன் தவணை கட்டவில்லை என்றால் வங்கியிலிருந்து இன்று நோட்டிஸ் வரப்போகிறது என நினைத்தால் வரத்தான் செய்யும்.

12 பி பஸ்சில் ஏழரை மணிக்கு அவள் கல்லூரிக்குப் போவாள் எனத் தெரிந்து ஆறு மணியிலிருந்தே பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தால் அவள் கட்டாயம் வரத்தான் செய்வாள் . உடனே மண்டைக்குள் மணியடிக்க ‘ அவள் வரப்போகிறாள் என எதோ ஒரு உள்ளுணர்வு சொன்னது” என்று சொல்வது காதலுக்கு உதவும். ஆனால் அது உண்மை அல்ல.

புத்திசாலிதனமான யூகங்களாக லாஜிக்கலாக, intelligent guess ஆகப் பல இருக்கும். அது நடப்பதை முன்கூட்டியே அறியும் அபூர்வ சக்தி அல்ல. இந்த மேட்சில் ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கப் போகிறது, ஷேர் மார்கெட் சரியப் போகிறது என்பதெல்லாம் புத்திசாலித்தனமான யூகங்கள். அவை ஈ.எஸ்.பி சக்தியினால் இல்லை.

இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தினமும் இதுபோல் பல விஷயங்கள் நடந்துவிடுமோ என பயந்து கொண்டிருப்போம். ஆனால் அவற்றில் பல நடக்கவே செய்யாது. அவற்றை எல்லாம் மறந்துவிடுவோம். நடந்த சம்பவத்தை மட்டும் மறக்காமல் ‘ அப்பவே எனக்கு எதோ தோணிச்சு’ என்போம். மேலே குறிப்பிட்ட 96 வயது தாத்தா 70 வயதாக இருந்ததிலிருந்தே தினமும் அவருக்கு எதோ ஆகிவிடுமோ என அவரது மனைவி பயந்திருப்பார். ஆனால் அதெல்லாம் அவருக்கு நினைவுக்கு வராது. இது போலத்தான் விபத்துக்களும். பல சமயம் நம்முடைய நெருங்கிய உறவினர்கள் வாகனங்களில் போகும்போது அவர்களுக்கு எதாவது ஆகிவிடுமோ என பயப்படுவோம். ஆனால் என்றாவது விபத்து நடந்தால் ‘ இன்னிக்கு எனக்கு என்னமோ கிளம்பும்போதே சகுனம் சரியில்லைன்னு தோணிச்சு’ என்போம்.

மூன்றாவதாக இன்னொரு விளக்கம் கொடுக்க வேண்டுமானால் டே ஜா வூ ( De ja vu) அல்லது டே யா வூ என அழைக்கப்படும் நிகழ்வு. அதாவது ஒரு இடத்துக்கு வரும் போதோ, சம்பவம் நடந்த போதோ இந்த இடத்துக்கு ஏற்கனவே வந்திருக்கிறோம் என்றோ அல்லது ஏற்கனவே இவரைப் பார்த்திருக்கிறோம் என்பது போல் ஒரு உணர்வு. இது மூளையில் ஏற்படும் சில தற்காலிக வேதியல் குழப்பங்களால் ஏற்படுகிறது. இது போன்றே சில சமயம் ஒரு சம்பவம் நடந்தவுடன் அது நடக்கப் போவதாக ஏற்கனவே முன்கூட்டியே நினைத்தாக மூளை குழப்பிக் கொள்கிறது. அவ்வளவே!! நீண்ட காலம் தொடர்பே இல்லாமல் இருந்த ஒருவர் திடீரென நம்மைத் தொலைபேசியில் அழைத்ததும் ‘ இன்னிக்குக் காலையிலதான் நீங்க கூப்பிடுவீங்களோன்னு நினைச்சேன். என்ன ஆச்சரியம்!’ என்பார். உண்மையில் அன்று காலை அவர் அப்படி நினைத்திருக்கவே மாட்டார்.

இன்னொரு விஷயம் கவனித்தால் இவற்றில் பல கெட்ட சம்பவங்களாக இருக்கும் . சிலசமயம் நல்ல விஷயங்களும் இருக்கும் . ஆனால் அளவு குறைவுதான். ஏனென்றால் மனம் தீமைகளைத்தான் அதிகம் கற்பனை செய்து கொள்ளும்.

இத்தனை விளக்கங்களையும் படித்து விட்டு ‘ இல்லைசார்! என் அண்ணன் பையன் திடீரென ஆக்சிடண்ட்ல செத்துட்டான். அன்னிக்குத்தான் காலையில எனக்கு அவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என தோணிச்சு. இது சத்தியம்” எனச் சூடம் அடித்துச் சொன்னால் ரொம்ப சிம்பிளாக ஒன்று சொல்கிறேன். பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று ஒரு பெரிய டயரி வாங்கிக் கொள்ளுங்கள். வருடத்தில் பாதி முடிந்தபின் வாங்கினால் பாதி விலைக்குக் கிடைக்கும். அதில் தினமும் யாருக்கு என்ன என்ன கெடுதல்கள் எல்லாம் நடக்கப் போகிறது என உங்களுக்குத் தினமும் தோன்றுகிறதோ அதைத் தினமும் எழுதி வாருங்கள். எத்தனை சதவிகிதம் நடக்கிறது எனப் பார்ப்போம்!!

இதெல்லாம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லை என்கிறீர்களா? பதிவின் முதல் வரியைப் படியுங்கள்.

நன்றி; திரு. டாக்டர் ஜி ராமானுஜம்

All reactions:

345345

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன