முறையான படிப்பு, பயிற்சி இல்லாத “தெரப்பிஸ்ட்”களிடம் எச்சரிக்கை தேவை
திருமணமான தம்பதிகள் பார்க்க வந்திருந்தார்கள். குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், கூட்டுக்குடும்பம் என்பதால் இயல்பாக வரக்கூடிய சிக்கல்கள், புரிதலின்மைகள் வந்திருக்கின்றன. கவுன்சிலிங் வேண்டி அந்த மனைவி தனது தோழி பரிந்துரை செய்த பிரபல மனநல ஆலோசகர் ஒருவரை சென்று பார்த்திருக்கிறார்.
முற்றிலும் ஆன்லைன் கன்சல்டேசன். ஆலோசனையில் மனைவியிடம் தனது சொந்த கருத்துகள், கொள்கைகள் எல்லாவற்றையும் சொல்லி குழப்பி விட்டிருக்கிறார் அந்த மனநல ஆலோசகர். அதற்கு பிறகு தம்பதிகளுக்கிடையே சிக்கல் அதிகரித்து விவாகரத்து வரை சென்றுவிட்டது.
மனைவியின் பெற்றோர்கள் இருவரையும் என்னிடம் அழைத்து வந்தார்கள். எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே அதுவாகவே சில நாட்களில் முடிந்து போகக்கூடிய விவகாரத்தை ஊதி பெருக்கியிருக்கிறார் அந்த மனநல ஆலோசகர். அவர் என்ன படித்திருக்கிறார் என்று போய் பார்த்தேன் ஏதோ sociology படித்திருக்கிறார்.
Must Read: தேவையற்ற பதற்றத்தை குறைக்க உதவும் பயிற்சிகள்
“அவர் எப்படி மனநல ஆலோசகர்?” என கேட்டேன் அவருக்கு சைக்காலஜியில் ஆர்வம் அதிகமாம் அதனால் ஏதோ ஒரு உளவியல் படிப்பு படித்திருக்கிறார் என்றார்கள்.
எப்படி உங்களது அந்தரங்கமான விஷயங்களுக்கான தீர்வை எல்லாம் யாரென்றே தெரியாத, முகநூலில் ஏதோ பிரபலம் என்று சொல்லிக்கொள்ளும் நபர்களை நம்பி சொல்கிறீர்கள் என கேட்டேன். பதில் இல்லை.
“குடும்பமே சிதைஞ்சி போச்சுனு நினைச்சேன் சார், இதுக்கு ஒரு செசன்க்கு மூவாயிரம் கொடுத்தேன்” என அந்த கணவர் பரிதாபமாக சொன்னார்.
சில நாட்களுக்கு முன்பு நான்காவது படிக்கும் குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு தாய் வந்தார்.
சரியாக படிக்கல என இதே போல பிரபலமான முகநூல் மனநல ஆலோசகரிடம் அணுகியிருக்கிறார். சாதாரண பள்ளியில் படித்தால் அப்படித்தான் இருப்பார்கள் என சொல்லி மாண்டசரி பள்ளி ஒன்றில் சேர்க்க சொல்லியிருக்கிறார். இந்த தாயும் வருடத்திற்கு மூன்று லட்சம் கட்டி குழந்தையை மாண்டசரி பள்ளியில் சேர்த்திருக்கிறார். அங்கு குழந்தை இன்னும் மோசமாகியிருக்கிறது, மிகுந்த மனவுளைச்சலில் தற்கொலை முயற்சி வரை போன பிறகு என்னிடம் கூட்டி வந்தார்கள்.
அந்த குழந்தையுடன் பேசிய சில நிமிடங்களிலேயே அதற்கு மிதமான கற்றல் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. அதை கண்டுபிடித்திருந்தாலே சுலபமாக தீர்வை பெற்றிருக்க முடியும். அதை செய்யாமல் பள்ளியை மாற்றி தற்கொலை வரை குழந்தை செல்லும் வரை பிரச்சினையை அந்த மனநல ஆலோசகர் என சொல்லிக்கொள்பவர் அதிகப்படுத்தியிருக்கிறார்.
Must Read: அணை போல் தேங்கியிருக்கும் அடி மனதின் எண்ணங்கள்….
நிறைய நேரங்களில் மாத்திரைக்கு தான் பக்க விளைவுகள், கவுன்சிலிங்கிற்கு எந்த பக்க விளைகளும் இல்லை என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது உண்மையில்லை. மாத்திரைகளை விட மோசமான பக்க விளைவுகளை தவறான கவுன்சிலிங் ஏற்படுத்தி விடும் என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணங்கள்.
இவை போன்ற ஏராளமான சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. காரணம் புற்றீசல் போல அதிகரித்திருக்கும் ‘தெரப்பிஸ்ட்’ என தங்களை அழைத்துக்கொள்ளும் துறை சாராத போலி மனநல ஆலோசகர்கள்.
எந்த ஒரு நிபுணத்துவமும்,
முறையான படிப்பும், அனுபவமும் இல்லாமல் “தெரப்பிஸ்ட்” என சொல்லிக்கொண்டு இணையத்தில் பணம் சம்பாதிப்பவர்கள் அதிகரித்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தீர்வு என நினைத்துக்கொண்டு பிரச்சினைகளை அதிகப்படுத்தும் வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள்.
மனம் மீதும் அதன் சிகிச்சைகள் மீதும் தயக்கம் குறைந்து மக்கள் இப்போதுதான் துறை சார்ந்த நிபுணர்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் முளைத்திருக்கும் இந்த போலி கும்பலின் நடவடிக்கைகள் மக்களை அவநம்பிக்கை கொள்ள வைத்திடுமோ என அச்சமாக இருக்கிறது, அதனால் தான் இதை இங்கு எழுதுகிறேன்.
மனநல ஆலோசனைக்காக நீங்கள் அணுகும்போது,
அவர் மனநலத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரா?
முறையான படிப்பை படித்தவரா? என்று பார்ப்பது நல்லது.
ஏனென்றால் பெரும்பாலான Psychology படிப்புகளில் clinical அனுபவங்கள் ஏதுமிருக்காது. அதுமட்டுமில்லாமல் மனநல ஆலோசனையை முடிந்தவரை நேரில் பெறுவது அவசியம். நேரில் செல்லும்போது உங்கள் மனநல ஆலோசகர் என்ன படித்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள் முடியும்.
இன்றைய சூழலில MD Psychiatry, Diploma in Psychological Medicine முடித்த மனநல மருத்துவர்கள் மற்றும் MPhil Clinical Psychology முடித்தவர்களே மனநல ஆலோசனை தருவதற்கு தகுதியான நபர்கள். அதனால் இனி தெரபி என்று செல்லும்போது உங்கள் தெரபிஸ்ட் இவற்றில் ஏதாவது ஒன்றை படித்திருக்கிறாரா என கேட்டு தெரிந்து கொண்டு செல்வது நல்லது.
நன்றி; சிவபாலன் இளங்கோவன்