நாங்குநேரியில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தேவை…
தமிழ்நாட்டை உலுக்கிய நாங்குநேரி சம்பவம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சின்னத்துரை, தனது சக மாணவர்கள் 3 பேரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறினார்.
பள்ளி நிர்வாகத்திடம் முறைப்படி புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேர் நாங்குநேரியில் உள்ள சின்னத்துரையின் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சின்னத்துரை படுகாயம் அடைந்தார். அவரது தங்கை 9 ஆம் வகுப்பு மணவி, தாக்க வந்தவர்களை தடுக்க முயன்றபோது அவரும் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த சின்னத்துரையும் அவரது சகோதரியும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து வருகின்றனர்.
நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட சின்னதுரையின் உறவினர்கள் நாங்கள் நாங்குநேரியில் வாழ்வது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி சென்னையில் உயர் அதிகாரிகளிடம் முறையிட வந்தனர். அவர்களை அறிவுச் சமூகம் தமிழ் முதல்வனும் சில களப்போராளிகளும் தலைமை செயலர் மற்றும் தேசிய எஸ்.சி/ எஸ்.டி ஆணையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பந்தப்பட்ட காவல்துறை அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று தேசிய எஸ்.சி/ எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அது சம்பந்தமான விசாரணையும் நடைபெறுகிறது. இந்தநிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் தலைமை செயலரை பார்க்க காங்கிரஸ் செல்வ பெருந்தகை ஆரம்பகட்டத்தில் உதவினார். பிறகு செ.கு தமிழரசன் தலைமையில் பாதிக்கப்பட்டோர் மீண்டும் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நாங்குநேரி பாதிக்கப்பட்ட/ அச்சுறுத்தலுக்குள்ளான மக்கள் சென்னை வந்தபோது அவர்களை பூவை.ஜெகன் மூர்த்தி, செ.கு. தமிழரசன், ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பட்டியலின தலைவர்களிடம் அழைத்துச் சென்று கலந்தாலோசித்து சென்னையில் இவர்கள் அனைவரையும் வைத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால் அதற்குள் ஒரு கட்சியினர் அவர்களை யாரையும் சந்திக்க வேண்டாம் என தடுத்துவிட்டனர். அவர்களும் ஒன்றும் செய்யவில்லை. ஒருவேளை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தால் இச்செய்தியும் சம்பவமும் தேசிய அளவில் பேசுபொருளாகி தீர்வு கிடைத்திருக்கும்.
களத்தில் பணியாற்றும் எனதருமை இளையதலைமுறையே ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்திருக்காமல் அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே அரசியல் செயல் போராட்டங்கள் வெற்றி பெறும் என்கிற எம் படிப்பினையை சொல்லவே இந்த கருத்தை நான் சொல்கின்றேன்.