வெடிப்புறப் பேசு

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை

இரண்டு நாட்களாக சென்னையில் மழை என்று செய்திகள் பார்க்கிறேன். இதேபோல கடந்த ஆண்டுகளிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு ஜனவரியிலும் பருவமழையின் மிச்சசொச்சம் இருக்கவே செய்யும்.

சென்னை புத்தகத் திருவிழாவை ஜனவரியில்தான் வைத்தாக வேண்டும் என்பது இல்லை. (2015 டிசம்பர் வெள்ளம் காரணமாக ஜனவரியில் நடத்தாமல் ஏப்ரலில் நடத்தினார்கள்.) ஜனவரி என்பது புத்தாண்டின் உற்சாகம் தருவதாக இருக்கலாம்தான். ஆனால் பல வகைகளிலும் இது உகந்த மாதம் அல்ல.

1. மழையின் காரணமாக கடை போட்டவர்கள் எல்லாரும் பதைபதைத்துக் கொண்டிருப்பார்கள். என்னதான் கூரை இருந்தாலும் ஒழுகத்தான் செய்யும். கொஞ்சம் தண்ணீர் பட்டாலும் அந்தப் புத்தகம் வீண்தான். லாபத்தில் நட்டமல்ல, முதலுக்கே மோசம்.

2. மழையின் காரணமாக வருவோர் எண்ணிக்கையும் குறையும். வியாபாரம் குறையும். விற்பனையாளர்கள் தமது கடைக்குக் கொடுத்த வாடகைக்குக்கூட கட்டுபடி ஆகாது.

3. மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் நேரம். அதனால் மாணவர்கள் வருகை குறையும். அவர்களே விருப்பப்பட்டாலும் “இது பரீட்சை நேரம். முதல்ல பாடப் புத்தகத்தைப்படி” என்று பெற்றோர் கூறுவது இயல்பு.

4. ஈரோடு போன்ற மற்ற ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு பள்ளிகளே தமது மாணவர்களை சுற்றுலா போல அழைத்து வருவதுண்டு. ஜனவரி மாதம் என்றால், பள்ளிகள் இதைச் செய்வதில் தயக்கம் காட்டும்.

5. தேர்வு நேரத்துக்கு முன்பு வாங்கிய நூல்கள் வாசிக்காமலே கிடக்கும்போது, அடுத்த முறை புத்தகத் திருவிழா போகலாம் என்றால், “ஏற்கெனவே வாங்கினதே படிக்காம கிடக்கு. முதல்ல அதையெல்லாம் முடிச்சுட்டு அப்புறம் வாங்கலாம்” என்று சொல்லப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

6. சரியாக பொங்கல் நேரம். பொங்கல் விடுமுறை என்பது வருபவர்களுக்கு வசதியாக இருந்தாலும், பண்டிகை செலவு புத்தகச் செலவை குறைக்க வைக்கும்.

எனவே,

1. மார்ச் ஏப்ரல் தேர்வுகள் முடிந்த பிறகு புத்தகத் திருவிழா நடத்துவது எல்லாருக்குமே பயனுள்ளதாக இருக்கும். மழையும் இருக்காது. கோடை விடுமுறைகளில், சிற்றுலா போல வந்து செல்ல, விடுமுறைகளில் வாசிக்க வசதியாக இருக்கும்.

2. புத்தகத் திருவிழாவுக்கு என்று மட்டுமல்ல, எல்லா வகையான கண்காட்சிகளுக்குமாக நிரந்தர அரங்கம் / வளாகம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். (ஏற்கெனவே அப்படி ஓர் அறிவிப்பு வந்ததாக நினைவு.) அதை பொதுத்துறை நிறுவனம்போல நிர்வகிக்க வேண்டும். கண்காட்சி நடத்துகிறவர்களிடம் கிடைக்கும் வாடகை மூலம் அதை பராமரிக்கலாம். (தில்லியில் பிரகதி மைதான் இப்படித்தான் செயல்படுகிறது.) புத்தகத் திருவிழா போன்ற அறிவுசார் செயல்பாடுகளுக்கு மட்டும் கொஞ்சம் சலுகை தரலாம், அரசும் கொஞ்சம் மானியம் தரலாம்.

பதிப்பகங்களோடு தொடர்புடையவர்கள் இந்த விஷயத்தை பபாசியின் / அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.

நன்றி; புதியவன் முகநூல் பதிவு

புகைப்படங்கள் நன்றி; எம்.பரக்கத் அலி முகநூல் பதிவு

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன