வெடிப்புறப் பேசு

சனாதனத்திற்கும், பகுத்தறிவுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

உதயநிதி சனாதன ஒழிப்பு பேசியதைத் தொடர்ந்து, அவர் வெவ்வேறு காலங்களில் கோயில்களில் சாமி கும்பிட்டதையும், மேல்சட்டையில்லாமல் கோயிலுக்குள் சுற்றி வந்ததை எல்லாம் பதிவிடுகிறார்கள்.

இதற்கும் சனாதனத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்?

கடவுள் நிந்திப்பு, கடவுள் ஏற்பு, கடவுள் மறுப்பு என்பதெல்லாம் வேறு, வேறு என்பது இந்த சனாதனவாதிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அவர்கள் கற்ற கல்வியே சனாதனம் தாண்டி ஏதுமில்லை என்பதே என் புரிதல்.

நான் கவுன்சிலர், எம்.எல்.ஏ, மந்திரி, எழுத்தாளன், பேச்சாளன், பத்திரிகையாளன், அரசு ஊழியர் – அலுவலர் இப்படி ஏதோ ஒரு வகையில் பொதுவானவனாக இருக்கிறேன்.

எனக்குள் பகுத்தறிவுக் கொள்கை நிரம்பவே இருக்கிறது.

ஆயினும் என் சமூகம் பல வண்ணங்களால் நிரம்பி உள்ளது.

ஒருவர் என் மீது அன்பு கொண்டு பழநி விபூதி இடுகிறார். இன்னொருவர் திருப்பதி ஏழுமலையானைக் கும்பிட்டு நெற்றியில் திருமன் போடுகிறார்.

அதோ குருவாயூர் கோயிலுக்குள் மேல் சட்டையில்லாமலே அனுமதி.

மக்களாகிய பக்தர்கள் சூழ அங்கே ஒரு பொது வயமானவனாக நான் செல்லும் போது அவர்களின் பொது நடைமுறையை ஏற்பது நாகரீகம். அதில் ஒளிந்து கிடப்பதே பகுத்தறிவு செயல்பாடு.

என் மனைவி கடவுள் பக்தை. நானோ அதை மூட நம்பிக்கையாகக் கருதுபவன்.

மனைவி அவர் இஷ்டக் கடவுளை பூஜித்து என் மீது மலர் தூவும் போது தட்டி விடுவது துவேஷம். அவர் செயல் மீதான எதிர்ப்புத் திணிப்பு.

சுருங்கச் சொன்னால் கணவன் என்ற நான், மனைவி என்ற அவர் மீது நடத்தும் ஆதிக்கம். அதுவும் ஒரு வன்முறைதான்.

அதை விட்டு அப்போதைக்கு அவரின் மரியாதையை ஏற்றுக் கொண்டு, பின்னர் ஆற அமர இருக்கும் போது அது எப்படியான மூட நம்பிக்கை என்பதை எடுத்துச் சொல்வது கருத்துச் சுதந்திரம்.

அதே அளவு மனைவிக்கும் அது ஒரு நம்பிக்கை என அதையே எடுத்துச் சொல்வதற்கு அனுமதிப்பதில் நாகரீகம் மட்டுமல்ல; பகுத்தறிவும் கூட நிறைந்திருக்கிறது.

மசூதிக்குச் சென்று குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி குடிப்பதிலும், தேவாலயத்தில் அமர்ந்து சிலுவைக்குறி இடுவதிலும்; ஆமென் சொல்லுவதிலும், திருப்பதி லட்டு, பழநி பஞ்சாமிர்தம் சாப்பிடுவதிலும் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால் – அதை சூழலுக்கு ஏற்ப அவர் ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவர் சனாதனவாதி அல்ல. அவர் பகுத்தறிவுவாதி அல்ல என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.

அவர் எந்த ஒரு சமயத்தையும் புண்படுத்தாது எல்லா அறமும் நல்லறம், எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லவே அந்தப்பாடு படுகிறார்.

அதன் மீது எந்த விமர்சனமாக இருந்தாலும் அதை பொது வெளியில் அம்பலப்படுத்தி மக்களே நீங்கள் மாக்களாக இராதீர்கள், மனிதர்களாக மாறுங்கள், மனிதனுக்கு மனிதன் ஏற்ற தாழ்வு கற்பிக்காதீர்கள், பெற்ற தாய்க்கு இணையானவர்கள் அத்தனை பெண்களும். அவர்களை நிந்திக்காதீர்கள். கேவலப்படுத்தாதீர்கள் என்று சொல்வதன் பெயர்தான் பகுத்தறிவு.

அந்தப் பகுத்தறிவின் ஆரம்பநிலைதான் சனாதன ஒழிப்பு. அதனுள்ளே நிற்பது சாதி மறுப்பு. பெண் விடுதலை. அதன் அடுத்த படிநிலையில் ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து தெளிவதுதான் கடவுள் மறுப்பு.

அது ஒரு பொதுவெளி. கடவுள் மறுப்பு என்பது திணிப்பு அல்ல. ஏற்பு.

எந்தந்த ரூபங்களில் எல்லாம் இல்லாத கடவுள் இருப்பதாகச் சொல்லி ஒவ்வொரு மனிதனின் நாடி நரம்புகளிலும் காலங்காலமாய் ஏற்றப்பட்டதோ, அதே போல வளர்ந்து வரும் சமூக விஞ்ஞானம் கடவுள் இல்லை என்பதைச் சொல்லிச் சொல்லி மானுட குலத்தை அதை ஏற்க வைக்கும்.

அது இயல்பாகவே நடக்கும். நடந்து கொண்டிருக்கிறது.

இதன் ஆரம்பநிலை சனாதன ஒழிப்புக்கே இவர்கள் இந்தத் துள்ளு துள்ளினால் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளதை அறியாமலே இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆக, உதயநிதி சனாதனம் பேசியதற்கும், இந்துசமயத்தை இழிவுபடுத்தியதாகச் சொல்லப் படுவதற்கும் ஒரு துளி சம்பந்தமில்லை.

கட்டுரை நன்றி;- கா.சு. வேலாயுதன்

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன